Friday, 4 September 2015

என்னை கவர்ந்த இஸ்லாம்

வியந்தேன்... மகிழ்ந்தேன்... பின் உறைந்தே தான் போனேன்...
மச்சானுக்கு தினமும் கைவலிக்காக ஃபிஸியோதெரபிக்கு போவோம். அங்கு ஃபிசியோதெரபிஸ்ட் ஜேம்ஸ் ஆனந்திடம் எதாவது பேசிக் கொண்டிருப்பேன். இன்னும் திருமணம் ஆகாத வாலிபர் அவர். என் முகநூல் நட்புவட்டத்திலும் இருக்கிறார். இன்று அவர் திடீரென்று என்னிடம் "ஏன் நீங்க தாவா பற்றி ஏதும் எழுதலாமே" என்றார். ஒரு கிருத்துவர் தாவா பற்றி கேட்டதும் எனக்கு சற்று ஆச்சரியம் தான். "தாவா பற்றி எழுத நிறைய பேர் இருக்காங்க. நான் முகநூலை என் பல்சுவை ரசனைகளின் களமாக பொழுதுபோக்குக்காக பயன்படுத்துகிறேன்" என்றேன்...
இனி நாங்கள் பேசியவை உரையாடல் வடிவில் தருகிறேன்...
"நானும் முதல் வருடம் படிக்கும் போது அப்படித்தான்... கற்பனைகள் அதிகம், நிறைய புத்தகங்கள் படிப்பேன். கவிதைகள் ரொம்ப பிடிக்கும். அப்புறம் இரண்டாவது வருஷம் படிக்கும் போது ஃபிலாசஃபி அதாவது தத்துவத்தில் ஆர்வம் வந்து அதில் ஆராய்ச்சி செய்தேன். மூன்றாவது வருடம் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்தேன். நான்காவது வருஷம் மதங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி இஸ்லாம் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்... இஸ்லாமிய கொள்கைகள் என்னை மிகவும் கவர்ந்தது"
"அப்படியானால் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாமே..."
"ஆம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். பெயர் மாற்றவில்லை... ஆனாலும் ஐந்து வேளை தொழுது வருகிறேன்... இஸ்லாமிய கொள்கைகளை கடைபிடித்து வாழ்கிறேன்..."
"மாஷா அல்லாஹ்... எப்படி இப்படி? எவ்ளோ நாளாச்சு...? வீட்டில் தெரியுமா? எதிர்க்கலையா...?"
"ஒரு வருஷம் ஆச்சு. வீட்டில் தெரியும். ஆரம்பத்தில் சண்டை போட்டாங்க. தங்கச்சிங்கள்ளாம் அல்லாஹ் ஒரே கடவுள்னு ஏத்துக்கிட்டாங்க... ஏசுவை வணங்கறதில்ல..."
"அப்ப தங்கச்சிகள்ளாம் இஸ்லாத்துக்கு வந்துட்டாங்களா...?"
"அல்லாஹ்வை ஒரே கடவுள்னு ஏத்துக்கிட்டாலே இஸ்லாத்துக்கு வந்தது தானே..."
சம்மட்டியடியான பதில்...!
"உங்க அம்மா அப்பா...?"
"இன்ஷா அல்லாஹ் வந்திருவாங்க... ஒவ்வொரு நேரமும் துவா கேட்டுட்டு இருக்கேன் அதுக்காக" அதாவது இன்னும் வரலைன்னு சொல்லக் கூடாதாம். வந்திருவாங்கன்னு பாசிடிவ்வா... அவ்ளோ நம்பிக்கை... அவ்ளோ தக்வா...
அவர் மேலும் சொன்னார்...
"இன்னிக்கு இஸ்லாம் என்றாலே ஐவேளை தொழுகை தான்... அஞ்சு நேரமும் தொழாவிட்டால் இஸ்லாம் இல்லை. நான் ஒரு நேரம் கூட விடுவதில்லை... குர்ஆன் ஹதீஸ் படிக்கிறேன். இஸ்லாத்தை எந்த இயக்கமும் சாராமல் அதன் தூய வடிவில் அறிந்திருக்கிறேன்.
தமிழ் குர்ஆனை ஒரு லைப்ரரியில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அதை படிக்க படிக்க தான் பயம் வந்தது. ஏற்கனவே நான் கிருத்துவ மார்க்கத்தில் இருந்ததால் குர்ஆனில் சொல்லப்பட்டதெல்லாம் எனக்கு எளிதாக விளங்கியது.
இன்னிக்கு பலரும் கொள்கைகளுக்காக சண்டை போட்டுக்கறாங்க. ஆனா இஸ்லாத்தில் தர்க்கம் செய்வதே தடுக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுமையில் அல்லாஹ் என்ன செய்தாய் என்ன செய்யவில்லை என்று தான் கேட்பான். ஹலால் எது ஹராம் எதுன்னு தெரிஞ்சு அதன்படி நடந்து கொண்டால் போதும்..."
அவர் சொன்னதை விழி விரிய கேட்டுக் கொண்டிருந்தேன்... மேலும் தொடர்ந்தார்...
"காஃபிர்கள் என்பவர்கள் இஸ்லாத்தை பற்றி தெரிந்து நிராகரிப்பவர்கள். அவர்களை அல்லாஹ் மன்னிப்பதில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருக்கும் அப்பாவிகள் ஏராளம் அவர்களிடையே நாம் தாவா செய்ய வேண்டும்..."
"நீங்க தாவா செய்றீங்களா...? யாரையாவது இஸ்லாத்துக்கு கொண்டு வந்திருக்கீங்களா?"
"ஆமாம் மேடம் இஸ்லாத்துக்கு வந்திருக்காங்க"
"மாஷா அல்லாஹ். எத்தனை பேர் உங்க மூலமா இஸ்லாத்துக்கு வந்திருக்காங்க..."
"அது நிறைய இருக்கு. கணக்குலாம் இல்லை. பொதுவா என் உறவினர்கள் நான் சொன்னதை கேட்டு இஸ்லாத்துக்கு வந்தவர்களை விட நான் செய்வதைப் பார்த்து இஸ்லாத்துக்கு வந்தவர்கள் தான் அதிகம்..."
"அப்படி என்ன செய்றீங்க?"
"என்ன இப்படி கேட்கிறீங்க... மது அருந்த கூடாது, வட்டி வாங்க கூடாது, விபச்சாரம் செய்ய கூடாது... இப்படி உயர்வான கொள்கைகள். அது மட்டுமல்ல... ஐவேளை நான் விடாமல் தொழுவது எல்லாம் பார்த்து தான் இஸ்லாத்துக்கு வர்ராங்க...
முக்கியமா தொழுகை. வெறித்தனமா முஸ்லிம்களை அதை பின்பற்றணும். உலகத்தில் இருக்கும் அத்தனை முஸ்லிம்களும் அதை பின்பற்றினால் மீதி இருக்கும் அத்தனை பேரும் அதைப் பார்த்து இஸ்லாத்துக்கு வந்திருவாங்க. ஆனா எல்லாரும் அப்படி இல்லையே... இன்னிக்கு பாதி பேர் தொழுகறதே இல்ல... ஆனா நான் அதுல வெறித்தனமா இருக்கேன். என் ஈமான் அதுல உறுதியா இருக்குது..."
"சரி கடைசியா ஒரு கேள்வி... எல்லாருக்கும் வரும் சந்தேகம் தான் இது. ஏதேனும் முஸ்லிம் பெண்ணை லவ் பண்ணி அவங்களை கல்யாணம் செய்ய வேண்டுமென்பதற்காக இஸ்லாத்துக்கு வந்தீங்களா..."
"அப்படியெல்லாம் இல்லை. இன்ஷா அல்லாஹ் பெண் பார்த்திருக்கேன். அப்பாம்மாவும் பார்த்து வெச்சிருக்காங்க. அல்லாஹ்வுடைய நாட்டப்படி தான் நடக்கும்..."
"ஆனா உங்களுக்கேத்த மாதிரி தீனில் ஸ்ட்ராங்கா இருக்கும் பெண் தானே சரிவரும்..."
"அப்படியில்லை மேடம். அஞ்சு வேளை தொழுதுட்டு வீட்டில் இருந்தால் போதும். என்னை பஜ்ருக்கு எழுப்பி விரட்டிவிட கூடிய பெண் அமைந்தால் போதும் எனக்கு..."
"சுபஹானல்லாஹ். உங்கள் உறுதி என்னை உறைய வைக்கிறது..."
"நான் நிறைய தப்பு செய்திருக்கேன். இதோ இந்த மேடம் (அவங்களும் பிசியொதெரபிஸ்ட் தான். அவருடன் வேலை பார்ப்பவர். அவரும் என் முகநூல் நட்பில் இருக்கார். தினமும் என் அத்தனை பதிவுகளையும் படிப்பார்... பெயர் வேண்டாம்) இந்த மேடம் ரொம்ப நல்லவங்க. எந்த தப்புமே செய்யாதவங்க. அவங்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்தை கொடுக்கல. நான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா எடுத்து சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனா தவறுகளில் இருந்த எனக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுத்து நேர்வழிப்படுத்தி இருக்கான். ஏன் கொடுத்தான்னு தான் ஆச்சரியமா இருக்கு..."
எனக்கு அழுகை தான் வந்தது... கிளம்ப மனமே இல்லை... கடைசியாக அவர் சொன்னார்...
"நிறைய பேர் தொழுவதில்லை. தப்பு செய்றாங்க. கடைசி காலத்தில் தவ்பா செய்தால் போதும்னு நினைக்கிறாங்க. ஆனால் அல்லாஹ் குர்ஆனில் சொல்றான்... நீங்க இளமையில் செய்த தவறுக்காக குற்றம் பிடிக்க மாட்டேன்னு நினைக்கிறீங்களா... கண்டிப்பாக அதற்கு பதில் சொல்லித்தான் ஆகணும்... அல்லாஹ் சொன்னதை இவர்களுக்கு தெரிவதில்லை. யாரும் குர்ஆனை முழுமையா அர்த்தம் புரிந்து வாசிப்பதில்லை... அதான் காரணம்..."
மாஷா அல்லாஹ். என் ஈமான் சார்ஜ் ஏறியது போல உணர்ந்தேன். என்ன ஒரு மன உறுதி. இன்னும் நிறைய பேசினோம். ரொம்ப பெரிசா போய்டும்னு முக்கியமான விஷயங்களை மட்டும் தொகுத்து தந்திருக்கிறேன் இங்கே...
புகைப்படத்துடன் முகநூலில் வெளியிடுகிறேன் என்றேன். வேண்டாமென்று மறுத்து விட்டார். சரி கட்டுரையாவது போடுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன். இதை அவரும் அவருடன் பணிபுரியும் இன்னொரு டாக்டரும் படிப்பார்கள். இன்னும் சில நாட்கள் தினமும் போவேன். போகும் போதெல்லாம் இன்னும் நிறைய அவரிடம் பேச வேண்டும் இன்ஷா அல்லாஹ்...!

Suhaina Mazhar
https://www.facebook.com/sumazla/

0 Responses to “ என்னை கவர்ந்த இஸ்லாம் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program