Monday, 14 October 2013

குர்பானி - 3

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

22:33. (குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற) பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய (அனுமதி) உண்டு. அதன் பின்னர் (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குர்பானிக்கான) இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது.

22:34. இன்னும் கால்நடை(ப்பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பான் கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன்தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிப்படுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!

22:35. அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ்(வின் திரு நாமம்) கூறப்பெற்றால், அவர்களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும்; அன்றியும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைச் சரிவரக் கடைப்பிடிப்போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (இறைவனின் பாதையில்) செலவு செய்வோராகவும் இருப்பார்கள்.

22:36. இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இறப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

22:37. (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!

பராஉ(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெநாளில்) உரையாற்றியதை கேட்டேன். அவர்கள் (தம் உரையில்) 'நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகவே இருக்கவேண்டும். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கிறவர் தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது' என்று கூறினார்கள்.
அப்போது அபூ புர்தா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?)' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'முதலில் அறுத்ததற்கு பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் 'அது செல்லாது' அல்லது 'நிறைவேறாது' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி - 5560.

அனஸ்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.
நூல்: புகாரி - 5565.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: பரா பின் ஆஸிப்(ரலி) நூற்கள்: திர்மிதீ(1417),

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ குர்பானி - 3 ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program