Sunday, 20 October 2013

உளூ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

5:6. முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான்.

'பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) 'நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்' என்றார்கள்" நுஅய்கி அல் முஜ்மிர் அறிவித்தார்.
நூல்: புகாரி - 136.

உஸ்மான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியாதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி (அங்கத் தூய்மை செய்தார்கள். ஆரம்பமாக) தம்முடைய முன் கைகளில் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தமது வலக் கரத்தைப் பாத்திரத்தினுள் செலுத்தி (தண்ணீர் அள்ளி) வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். மேலும், இரு (கைகளையும்) முழங்கை மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை (ஈரக் கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள். பிறகு தம்மிரு கால்களையும் மூன்று முறை கழுவினார்கள்.
பின்னர் யார் எனது இந்த உளூவைப் போன்று உளூச் செய்து வேறு எந்த (கெட்ட) எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவர் முன்பு செய்த (சிறிய) பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தெரிவித்தார்கள்.
நூல்: முஸ்லிம் - 384.

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: யார் தொழுகைக்காக முழுமையான முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து, கடமையான தொழுகைக்காக நடந்துசென்று, மக்களுடன் தொழுகிறாரோ அல்லது கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்கிறாரோ அல்லது பள்ளிவாசலில் தொழுகிறாரோ அவருக்கு அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிடுகின்றான்.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் - 393.

ஷத்தாத் பின் அல்ஹாத் (ரலி) அவர்களுடைய முன்னாள் அடிமையான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்த தினத்தன்று நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது (ஆயிஷா (ரலி) அவர்களுடைய சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அங்கு வந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், அப்துர் ரஹ்மான்! உளூவை நிறைவாகச் செய்! ஏனெனில், (உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால்களுக்கு நரக வேதனைதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
நூல்: முஸ்லிம் - 405.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ உளூ ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program