Tuesday, 2 July 2013

பதவி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.    


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

6:83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்றாஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.

6:165. அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்;. மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்.

_____________________________________ ۩۞۩ ______________________________________

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
நூல்: புகாரி 7138.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 7142.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்தாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார்.
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 7143.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.
நூல்: புகாரி 7144.

அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். அந்த அன்சாரி (ஒரு கட்டத்தில்) படைவீரர்களின் மீது கோபம் கொண்டு, 'நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லையா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம்' என்றனர். அவர், 'விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டி அதில் புகுந்து விடும்படி உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன்' என்றார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்து நெப்பை மூட்டினர். அதில் நுழைய நினைத்தபோது ஒருவரையொருவர் பார்த்தபடி நின்று கொண்டனர். அவர்களில் ஒருவர், '(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றினோம்; அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?' என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது; அவரின் கோபமும் தணிந்தது. பிறகு நபி(ஸல்) அவர்களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒருபோதும் வெளியேறிருக்கமாட்டார்கள்; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்' என்றார்கள்.
நூல்: புகாரி 7145.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் ஓர் இறைத்தூதரை அனுப்பினாலும் சரி, ஒருவரை (ஆட்சிக்கு)ப் பிரதிநிதியாக ஆக்கினாலும் சரி அவர்களுக்கு இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் அவசியம் இருப்பார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார். மற்றோர் ஆலோசகர், அவரைத் தீமை புரியும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 7198.

0 Responses to “ பதவி ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program