Saturday, 13 July 2013
நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
"நோன்பு(பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!" (என்று அல்லாஹ் கூறினான்)"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 1894.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 1903.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!" என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் 'நான் நோன்பாளி!" என்று அவர் சொல்லட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 1904.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!"
இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 1923.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், 'பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?' என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள், 'நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால்விட்டுவிடு" என்றார்கள்.
நூல்: புகாரி 1943.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!"
இதை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 1957.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
"நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள். அப்படி உங்களில் யாரேனும் தொடர் நோன்பு நோற்பதாக இருந்தால் ஸஹ்ர் வரை நோற்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே!?' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களைப் போன்றவன் அல்லன்; எனக்க உணவளிப்பவனும் புகட்டுபவனும் உள்ள நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்" என்றனர்.
நூல்: புகாரி 1967.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும் ”
Post a Comment