Thursday, 18 July 2013
பயணத்தில் நோன்பு
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
2:184. (இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்); ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்; விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; விட்டும் இருக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் 2044.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது.
நாங்கள் ரமளான் மாதம் பதினாறாவது நாள் அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து போர் புரிந்தோம். அப்போது எங்களில் சிலர் நோன்பு நோற்றிருந்தனர். வேறுசிலர் நோன்பு நோற்காமலிருந்தனர். அப்போது நோன்பு நோற்றிருந்தவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை சொல்லவில்லை.
நூல்: முஸ்லிம் 2048.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஒரு) பயணத்திலிருந்தோம். அப்போது எங்களில் நோன்பு நோற்றவர்களும் இருந்தனர்; நோன்பு நோற்காதவர்களும் இருந்தனர். அப்போது வெப்பமிக்க ஒரு நாளில் ஓர் இடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் மேல்துண்டு வைத்திருந்தவரே (அன்று) அதிகமாக நிழலைப் பெற்றார். தமது கரத்தால் வெயிலை மறைத்துக் கொண்டோரும் எங்களில் இருந்தனர். நோன்பு நோற்றிருந்தவர்கள் செயலற்றுப்போயினர். நோன்பு நோற்காதிருந்தவர்கள் எழுந்து (செயல்படத் தொடங்கினர்.) கூடாரங்களை நிறுவினர்; வாகன (ஒட்டக)ங்களுக்கு நீர் புகட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்" என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 2055.
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் கடுமையான வெப்பத்தில் (பயணம்) புறப்பட்டோம். கடும் வெப்பம் காரணமாக எங்களில் சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்து (மறைத்து)க்கொண்டனர். அப்(பயணத்தின்) போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.
நூல்: முஸ்லிம் 2063.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ பயணத்தில் நோன்பு ”
Post a Comment