Tuesday, 15 April 2014
மாமனிதரைத் தலைவராகக் கொண்ட சமுதாயம்:
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரை கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி அந்தச் சால்வையால் (அவர்களை) வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி(ஸல்) அவர்களின் தோள்பட்டையில் அடையாளம் பதித்துவிட்டிருந்ததை கண்டேன். பிறகு அவர், 'முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்' என்றார்.
உடனே நபி(ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பிறகு அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.
நூல்: புகாரி - 6088.
மதத் தலைவராகவும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராகவும் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முன்பின் தெரியாதவர் – நாட்டுப்புறத்தைச் சார்ந்தவர் – ஆட்சித் தலைவரை நேரடியாக நெருங்க முடிகின்றது, சட்டையைப் பிடித்து, கீழே விழும் அளவுக்குப் படுவேகமாக இழுக்க முடிகின்றது. அந்த நிலையிலும் அவர்களால் சிரிக்க முடிகின்றது! என்னே அற்புத வாழ்க்கை!
அந்தக் கிராமவாசி, சட்டையைப் பிடித்து இழுத்து ஏதேனும் நியாயம் கேட்க வந்தாரா? நபிகள் நாயகம் செய்த தவறைச் சுட்டிக்காட்டுவதற்காக இப்படி இழுத்தாரா? இல்லை. நபிகள் நாயகத்திடம் உதவி கேட்டுத்தான் இழுத்திருக்கிறார்.
உதவி கேட்டு வருபவரிடம் அடக்கம் இருக்க வேண்டும், பணிந்து, குழைந்து கோரிக்கையை முன் வைக்க வேண்டும். பொதுப்பணத்தைக் கேட்பதென்றாலும் கொடுப்பவரைப் புகழ்ந்து தள்ள வேண்டும், இல்லை என்றால் பெற முடியாது என்பது பொதுவான உலகியல் நடப்பு.
இந்தக் கிராமவாசியின் அணுகுமுறையைப் பாருங்கள்! நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களிடம் அவர் இப்படி நடந்து கொண்டால் கூட ஒங்கி அறைந்து விடுவோம்.
சட்டையைப் பிடித்துத் தோள்பட்டை கன்றிப் போகும் அளவுக்கு இழுத்ததும் முஹம்மதே! என்று பெயர் சொல்லி அழைத்ததும் அல்லாஹ் உம்மிடம் தந்தவற்றிலிருந்து எனக்குத் தருவீராக! என்று அதிகாரத் தோரணையில் கேட்டதும் அதன் பிறகும் நபி (ஸல்) அவர்கள் சிரித்தது மட்டுமின்றி அவருக்குக் கொடுத்து அனுப்பியதும்; உலக வரலாற்றில் வேறு எவரிடமும் காண முடியாத அற்புத நிகழ்ச்சியாகும்.
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ மாமனிதரைத் தலைவராகக் கொண்ட சமுதாயம்: ”
Post a Comment