Saturday, 19 April 2014

மாமனிதர் நபிகள் நாயகத்தின் நீதி

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

மக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும்? நபி (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா? எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள்.

நூல்: புகாரி - 6788.


குரைஷிக் குலத்தவர் தம்மை மிகவும் உயர்ந்த குலத்தவராகக் கருதி வந்தனர். தமது குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி திருடியதும் – நபிகள் நாயகம் கையை வெட்டுவார்கள் என்பதால் – கலக்கமுற்றனர். தமது குலத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமோ என்று கவலைப்பட்டனர்.

தமது குலத்துப் பெண்ணுக்கு மட்டும் சட்டத்திலிருந்து விலக்குப் பெறுவதற்காக உஸாமாவைப் பரிந்து பேச அனுப்பினார்கள். நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகனாக இருந்த ஸைத் என்பாரின் மகனே உஸாமா. அதாவது வளர்ப்புப் பேரன் நபிகள் நாயகத்தின் அன்புக்குப் பாத்திரமானவராக உஸாமா இருந்தார். ஆயினும் வளர்ப்புப் பேரன் என்ற நெருக்கம் நபிகள் நாயகத்தை அசைத்து விடவில்லை. ‘வளர்ப்புப் பேரன் என்ன? நான் பெற்ற மகனேயானாலும் சட்டத்தின் முன் அவரும் சமமானவர்தாம்’ என்று கூறி நீதிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்கள்.

சுற்றம், நட்பு, செல்வம், செல்வாக்கு எதுவுமே நீதி வழங்குவதை விட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தடுக்க வில்லை. எள்ளின் முனையளவும் அவர்களைத் தடம் புரளச் செய்யவில்லை என்பதற்கு இந்த வரலாற்றுக் குறிப்பு தெளிவான சான்று.

இம்மாமனிதரின் வழியைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே இவ்வுலகில் நீதியை நிலைநாட்ட முடியும் என்பதை உலகம் உணரட்டும்.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக்கூடிய
நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ மாமனிதர் நபிகள் நாயகத்தின் நீதி ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program