Thursday, 1 August 2013
ரமலான் சிந்தனைகள் - 9
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகையில் குர்ஆனின் பெரும் பகுதியை ஒரு இரவு முழுவதும் ஓதுவதையும் தொழுகையை ஒரு இரவு முழுவதும் தொழுததையும் மாதம் முழுவதும் நோன்பு நோற்றதையும் ரமலானைத்தவிர மற்ற மாதங்களில் நபி ஸல் அவர்கள் செய்ததாக நான் அறியவில்லை.
நூல் : நஸயீ 1623.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள்.
நூல்: புகாரி 2020.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!"
நூல்: புகாரி 2024.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!"
நூல்: புகாரி 2026.
அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன.
நூல்: புகாரி 2027.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ ரமலான் சிந்தனைகள் - 9 ”
Post a Comment