Wednesday, 14 August 2013

உலக ஆசை - 1

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் - 5663.


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) "ஆலியா"வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, "உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?" என்று கேட்டார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?" என்று கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்" என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் - 5664.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடியான், "என் செல்வம்; என் செல்வம்" என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச்செல்லக் கூடியவையும் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் - 5666.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ உலக ஆசை - 1 ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program