Thursday, 20 August 2015

காய்கறிக் கழிவில் கலக்கலான உரம்..!

'மட்கும் குப்பையை பச்சைத் தொட்டியில் போடுங்கள்', 'மட்காதக் குப்பையை சிவப்புத் தொட்டியில் போடுங்கள்' என்றெல்லாம் வண்ணங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுகின்றன, நகர்ப்புறங்களில். ஆனால், இதைப் பற்றிய விழிப்பு உணர்வு சரியாக இல்லாத காரணத்தால், மாற்றி மாற்றி குப்பைகளைக் கொட்டி, அதன் நோக்கத்தையே சிதைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் இங்கே அதிகம்.
'படித்தவர்கள் வாழும் இடம்' என்று சொல்லப்படும் நகர்ப்புறங்களிலேயே இந்த நிலை என்றால், கிராமங்களில் கேட்கவே வேண்டாம். ஆனால், புதுச்சேரி மாநிலத்தின் மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கிராமங்கள்... இந்த விஷயத்தில் ஊருக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன! காய்கறிக் கழிவுகள், பழைய சாதம், அழுகியப் பழங்கள் என்று வீட்டில் கிடைக்கும் மட்கக்கூடிய கழிவுகளை முறையாகக் கையாண்டு, உரமாக மாற்றும் உதாரண கிராமங்களாகத் திகழ்கின்றன, இந்த கிராமங்கள்! மதகடிப்பட்டு கிராமத்தைச் சுற்றியுள்ள ஏழு கிராமங்களில் மொத்தம் 2,500 வீடுகளில் திடக்கழிவு மூலம் உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர் இல்லத்தரசிகள்.
21 நாட்களில் உரம் !
இதுபற்றி நம்மிடம் பேசிய, மதகடிப்பட்டு விஜயா, ''2009ம் வருஷம் பாண்டிச்சேரி 'ஈகோவென்ச்சர்’ அமைப்புக்காரங்க எங்க ஊர்ல மீட்டிங் போட்டாங்க. 'வீட்டுல மீதமாகுற குப்பைகள்ல மக்குறக் குப்பைகள் மூலமா இயற்கை உரம் தயாரிச்சு, வீட்டுத் தோட்டத்துக்குப் பயன்படுத்தலாம்’னு சொன்னவங்க, தயாரிக்கறதுக்கும் கத்துக் கொடுத்தாங்க. அதுக்காக ஆளுக்கு ரெண்டு பிளாஸ்டிக் கேன், மத்த சாமான்களையெல்லாம் இலவசமாவே கொடுத்தாங்க. அதன்படியே அடுப்படியில வீணாகுற காய்கறி, பழம், சாதம்னு அத்தனையும் உரமா மாத்தி தோட்டத்துல உபயோகப் படுத்திக்கிட்டிருக்கேன்.
எதுவா இருந்தாலும், 21 நாள்ல நல்ல உரமா மாறிடும். என் வீட்டுல இருக்கற ரெண்டு தென்னை மரம்; அஞ்சு வாழை மரம்; ரெண்டு மாமரம்; ரெண்டு சென்ட் காய்கறித் தோட்டம் எல்லாத்துக்கும் இந்த உரத்தைத்தான் போடுறேன். காயெல்லாம் நல்ல ருசியாவும் வாசனையாவும் இருக்கு'' என்றார் மகிழ்ச்சியுடன்.  அதே ஊரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, ''இந்தத் திட்டத்தோட ஒருங்கிணைப்பாளரா இருக்கேன். எங்க ஊர்ல 350 குடும்பங்கள் திடக்கழிவு மேலாண்மையில ஈடுபட்டிருக்காங்க. இதுக்குத் தேவையானப் பொருட்களான கேன், இ.எம். (Effective Micro organisms),மரத்தூள், அரிசிச் சாக்குப்பைனு எல்லாத்தையும் ஆரம்பத்துல இலவசமாதான் கொடுத்தோம். இப்போ பயனாளியோட பங்களிப்பும் இருக்கணும்னு 35 ரூபாய்க்கு இந்த சாமான்கள கொடுத்திட்டிருக்கோம். மக்கக்கூடிய குப்பைகள நாங்களே உரமா மாத்திடுறோம். மக்காதக் குப்பைகள நகராட்சி வண்டியில கொட்டுறோம். ஆரம்பத்துல மக்கள் இதுல அவ்வளவா ஈடுபாடு காட்டல. ரொம்பவே தயங்கினாங்க. ஆனா, இதன் மூலமா கிடைக்கற உரத்தை வெச்சு செடிகளையெல்லாம் நல்லா வளர்க்கலாம்னு தெரிஞ்சதும்... ஆர்வமாயிட்டாங்க. வீட்டுல இருக்குற எலுமிச்சை, தென்னை, சப்போட்டாவுக்கெல்லாம் இந்த உரத்தைக் கொடுத்ததுல அதிகமா காய்க்க ஆரம்பிச்சுருக்கு'' என்றவர், உரம் தயாரிக்கும் விதத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
''ஒரு பிளாஸ்டிக் கேனில் இரண்டு செங்கற்களை வைத்து, அவற்றின் மீது பிளாஸ்டிக் பையில், கழிவுகளை தினமும் சேகரிக்க வேண்டும். ஒவ்வொரு நாள் கழிவுகளைப் போடும்போதும் அதில் இ.எம். கலந்த மரத்தூளில் ஒரு கைப்பிடி அளவுக்குப் போட்டு மூடி வைக்க வேண்டும். ஒரு கிலோ மரத்தூளுக்கு 400 மில்லி இ.எம் என்ற அளவில் கலந்து வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது பயன்படுத்தலாம். இதனால் எளிதாக மட்குவதுடன் நாற்றமும் அடிக்காது. கேன் நிறைந்த பிறகு, ஏதாவது மரத்தினடியில் அதைப் புதைத்துவிட வேண்டும். 21 நாட்கள் கழித்து தோண்டி எடுத்து கேனுக்குள் உள்ள திரவத்தை எடுத்து தனியாகச் சேகரிக்க வேண்டும். இந்த திரவத்தை உரமாகவும் பயன்படுத்தலாம். பாசன நீருடன் கலந்து விட்டால், பயிர் அருமையாக விளையும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மில்லி என்கிற விகிதத்தில் கலந்து, மேல் தெளிப்பாகத் தெளித்து, மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்'' என்றார் ஜெயலட்சுமி
'ஈகோவென்ச்சர்’ நிறுவனத்தைச் சேர்ந்த மணிமாறன், ''பாண்டிச்சேரியில் ஆரோவில் மூலமா திடக்கழிவு மேலாண்மையைக் கத்துக்கிட்டு, மக்களுக்குச் சொல்லிக் கொடுத்திட்டிருக்கோம்.
75 குடும்பங்கள வெச்சுதான் இதை ஆரம்பிச்சோம். அதுல வெற்றி கிடைச்சதுக்கப்பறம் 'சுஸ்லான்’ நிறுவன உதவியோட மதகடிப்பட்டு கிராமத்தைச் சுத்தியிருக்குற ஏழு கிராமங்கள்ல மொத்தம் 2,500 குடும்பங்கள் இந்தத் திட்டத்துல இணைஞ்சிருக்காங்க'' என்று சொன்னார்.

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=8529

0 Responses to “ காய்கறிக் கழிவில் கலக்கலான உரம்..! ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program