Tuesday, 17 September 2013
வீட்டிலேயே தயாரிக்கலாம் உரம்!
வீட்டுத் தோட்டம் பற்றி பேசிய 'சுற்றுச்சூழல் நிபுணர்' சுல்தான் அகமது இஸ்மாயில், வீட்டிலிருந்து கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி பற்றி சொன்ன விஷயங்கள் இங்கே...
''ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால்... கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும். பிளாஸ்டிக் பொருட்கள், அசைவக் கழிவுகளை பயன்படுத்தக் கூடாது. மரங்களிருந்து விழும் இலை மற்றும் தழைகள், பூஜைக்குப் பயன்படுத்திய பூக்கள்... என வீட்டில் கிடைக்கும் பெரும்பாலான கழிவுகளையும் பயன்படுத்தலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு கிலோ அளவுக்கு வாழை மற்றும் திராட்சை போன்ற பழங்களின் கழிவுகள் மற்றும் ஒரு கிலோ வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி, 5 லிட்டர் தண்ணீரை ஊற்றி பதினைந்து நாட்கள் வைத்துவிட வேண்டும். பிறகு, அருமையான டானிக் கிடைக்கும். இதைச் செடிகளுக்குத் தெளித்தால், அருமையாக வளரும்.
செடிகள் வாடி, வெளுத்துப் போனது போலிருந்தால்... சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் குறைவாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். இதற்கு, 10 முட்டைகளை உடைக்காமல் ஒரு பாத்திரத்தில் சேர்த்து, 10 எலுமிச்சம் பழங்களைப் பிழிந்துவிட்டு, கூடவே 250 கிராம் வெல்லத்தையும் சேர்த்து, பதினைந்து நாட்களுக்கு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். இதுதான் முட்டைக் கரைசல். இதைச் செடிகளுக்குத் தெளிக்கலாம்.
ஆடு சாப்பிடாத இலை மற்றும் தழைகளை மொத்தமாக ஐந்து கிலோ அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில், 9 லிட்டர் தண்ணீர் கலந்து 15 நாட்கள் ஊறவைக்க வேண்டும். 16-ம் நாள் இதை பயிர்களுக்குத் தெளித்தால்... அதுதான், பூச்சிவிரட்டி.
அப்படியும் பூச்சிகள் கட்டுப்படவில்லையெனில், இஞ்சி-100 கிராம், பூண்டு-100 கிராம், பெருங்காயம்-10 கிராம் ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்து, அதை ஒரு லிட்டர் நாட்டுமாட்டு சிறுநீரில் கலந்து, 9 லிட்டர் தண்ணீர் ஊற்றி 10 நாட்கள் அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு, இதைத் தினமும் செடிகளின் மீது தெளிக்கலாம்.''
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ வீட்டிலேயே தயாரிக்கலாம் உரம்! ”
Post a Comment