Monday, 2 September 2013
உள்ளங்கள் மாறாதவரை...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் - 5012.
உள்ளத்தில் இரக்கம்:
உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.
எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஹுரக்கா' கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்டபோது அவர், 'லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், 'உஸாமாவே! அவர், 'லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?' என்று கேட்டார்கள். நான், '(நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு கூறினார்" என்று சொன்னேன். (ஆனால், என் சமாதானத்தை ஏற்காமல்) நபி(ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான், '(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன்.
நூல்: புகாரி - 4269.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அவர் தம் (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, 'உங்களைக் கடித்தது ஒரேயொர் எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?)" என்று வஹீ (இறைச்செய்தி) அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.
நூல்: புகாரி - 3319.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 3321.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை.
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 3482.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ உள்ளங்கள் மாறாதவரை... ”
Post a Comment