Sunday, 8 September 2013
சிறப்பான நன்மைகள்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
'ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 12.
'நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காகப் பிரார்த்தனைத் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தவர் நிச்சயமாக நன்மையின் இரண்டு குவியலைப் பெற்றுத் திரும்புவார். ஒவ்வொரு குவியலும் உஹது மலை போன்றதாகும். அதற்காகப் பிரார்த்தனை தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 47.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"ஒருவர் எந்த இடத்தில் தொழுதாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும்போது அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் உளூ முறிந்து விடாமலிருக்க வேண்டும். 'இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!" என்று கூறுகிறார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 445.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி),
நூல்: திர்மிதீ 2613.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒருவர் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பாதையில் முட்கிளையொன்றைக் கண்டு அதை எடுத்து (எறிந்து)விட்டார். அவரின் இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 2472.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ சிறப்பான நன்மைகள் ”
Post a Comment