Friday, 13 September 2013
பாதை ஒழுக்கம்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
"நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், 'எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், 'பாதையின் உரிமை என்ன?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி - 2465.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடும் தாகம் ஏற்பட்டது. (வழியில்) அவர் ஒரு கிணற்றைக் கண்டு அதில் இறங்கினார். (அதிலிருந்து) தண்ணீர் குடித்தார். பிறகு வெளியே வந்தார். அப்போது, தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) ஈரமண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தார். 'எனக்கு ஏற்பட்டது போன்ற (கடும்) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது போலும்' என்று (தன் மனத்திற்குள்) கூறினார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி (மேலே கொண்டு வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ், அவரின் இந்த நற்செயலை அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பளித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்றுமுள்ள பிராணிகள்) விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்குக் கருணை காட்டினால்) உங்களுக்குப் பிரதிபலன் உண்டு" என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி - 2466.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் (தொழுவதற்காக) நடந்து வரும் பாதையில் ஒரு முள் மரக்கிளை கிடப்பதைக் கண்டு, அதை அந்தப் பாதையைவிட்டும் அகற்கும் பணியில் ஈடுபட்டார். அப்பணி அவரை (ஆரம்ப நேரத்தில் தொழுவதைவிட்டும்) பிற்படுத்திவிட்டது. இப்படிப்பட்ட அந்த மனிதருக்கு அல்லாஹ் நன்றி செலுத்துகிறான். அவருக்குப் பாவமன்னிப்பும் அளிக்கிறான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 652.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ பாதை ஒழுக்கம் ”
Post a Comment