Sunday, 15 September 2013
தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நாளும் இரண்டு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், 'அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குக் பிரதிபலனை அளித்திடுவாயாக!' என்று கூறுவார். இன்னொருவர் அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!" என்று கூறுவார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 1442.
அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்...?' எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்), 'ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து, தர்மமும் செய்ய வேண்டும்" என்றனர். தோழர்கள், 'அதுவும் முடியவில்லையாயின்' எனக் கேட்டதற்கு, 'தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்" என்று பதிலளித்தார்கள். தோழர்கள், 'அதுவும் இயலாவில்லையாயின்" என்றதும் 'நற்காரியத்தைச் செய்து தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்!" எனக் கூறினார்கள்.
நூல்: புகாரி - 1445.
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்று கூறினார்கள். அப்போது "(தர்மம்செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்" என்று சொன்னார்கள். "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்" என்றார்கள். "(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "அவர் "நல்லதை" அல்லது "நற்செயலை"(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்" என்றார்கள். "(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்" என்றார்கள்.
நூல்: முஸ்லிம் - 1834.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் தம் மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும்; அல்லது அவரின் பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 2989.
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்
(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தம் முகத்தைத் திருப்பினார்கள்.
பிறகு, 'பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் கொலைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்)' என்றார்கள்.
நூல்: புகாரி - 6023.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழ்ந்து
மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் ”
Post a Comment