Friday, 9 October 2015

ஓர் முதுமை தாயின் கண்ணீர்!


எனதருமை மகனே !

நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்..
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில் தள்ளாட்டம்
என்மீது வெள்ளோட்டம் பார்க்கும்...
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !

என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான் - சாப்பிடுகையில் கைநடுங்கி சாதம் சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே.....
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய நாட்களை நினைவு கூர்க !

ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !

ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
ஒரே
மாயாவி கதையை
ஒரு நூறு முறை
எனை படிக்கச் சொல்லி
நீ உறங்கிய
இரவுகளை ஞாபகம் கொள்க !

நான் குளிக்க மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே....
உன்னை குளிக்க வைக்க
நான் செய்த யுக்திகளை
எனக்காக புதுப்பித்துத் தருக!
கேவலப் படுத்தாதே....
கற்றுத் தருக ! கவனித்துப்
பழக அவகாசம் தருக !

இனி, சில நேரங்களில் -
என் நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்!
நிறைய வேலை இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே.....
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்றுக!
ஆசுவாசப் படுத்துக!
என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ முதல் நடை பழக
என் விரல் நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்க !

ஒரு நாள் சொல்வேன் நான்,
வாழ்ந்தது போதுமென்று !
வருத்தப் படாதே.....
சில வயது வரை வாழ்க்கைக்கு அர்த்தமில்லை...
சில வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை...
காலம் வரும்போது - இதை
நீயும் புரிந்து கொள்வாய் !
இனி நான் வேண்டுவதெல்லாம்
நீ எனை புரிந்து கொண்ட
புன்னகை !

மீண்டும் சொல்கிறேன் !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.....
என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????
( ஓர் முதுமை தாயின் கண்ணீர்)

0 Responses to “ ஓர் முதுமை தாயின் கண்ணீர்! ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program