Thursday, 11 April 2013

பொறுமை - 3

4:12. இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் – (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் – தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ – இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் – அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் – (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.

4:25. உங்களில் எவருக்குச் சுதந்தரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ, அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;) அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபச்சாரம் செய்யாதவர்களாகவும், கள்ளநட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே, அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால், விவாகம் செய்யப்பட்ட சுதந்தரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்; தவிர, உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று(அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

5:101. ஈமான் கொண்டவர்களே! சில விஷயங்களைப்பற்றி (அவசியமில்லாமல்) கேட்டுக் கொண்டிராதீர்கள். (அவை) உங்களுக்கு வெளிப்படுத்தப்படுமானால் உங்களுக்கு (அது) தீங்காக இருக்கும்; மேலும் குர்ஆன் இறக்கப்படும் சமயத்தில் அவை பற்றி நீங்கள் கேட்பீர்களானால் அவை உங்களுக்குத் தெளிவாக்கப்படும்; (அவசியமில்லாமல் நீங்கள் விசாரித்ததை) அல்லாஹ் மன்னித்து விட்டான்; அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான்.

0 Responses to “ பொறுமை - 3 ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program