Thursday, 25 April 2013
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்
எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றை நிறுவி,அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பல நூற்றாண்டுகளுக்கு பின்னரும் அவர்களின் தாக்கம் சக்திமிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
முஹம்மது நபி சமயத்தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் மாபெரும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெற்றிருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு இவ்வுலகத்தின் இறுதி நாள் வரை இறைத் தூதராக இருக்கும் தகுதியை இறைவன் வழங்கியுள்ளான். மேலும் மனிதனால் செய்ய முடியாத பல அற்புதங்களையும் இறைவனின் உதவியால் செய்து காட்டியுள்ளார்கள். சிறந்த கல்வியாற்றலையும் பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்களிடம் துளியும் கர்வமோ ஆணவமோ இருந்ததில்லை. மேலும் அதை வெளிப்படுத்தும் வண்ணம் தங்கள் செயலையும் அமைத்துக் கொள்ளவில்லை.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ''ஏன் அழுகிறீர்கள்?'' என்றார்கள். அதற்கு நான், ''அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?'' என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (4913).
மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். அந்த அளவிற்கு மிக எழ்மையானவர்களாகவும் சமூக சேவை புரிபவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி (6072)
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசினார். அப்போது அவரது தோள் புஜங்கள் நடுங்கின. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ''சாதரணமாக இரு! நான் மன்னன் அல்லன். உப்புக் கண்டத்தை சாப்பிடும் பெண்ணின் பிள்ளை தான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி) நூல்: இப்னுமாஜா (3303)
'ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பளிப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பளிப்பாகத் தரப்பட்டாலும் சரி! நான் அதைப் பெற்றுக் கொள்வேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (2568)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், ''நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ
நூல்: புகாரி (6247)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள்.
ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, ''அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்'' என்று கூறினார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரிலிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், ''இதை ஏன் இப்படிச் செய்தாய்?'' என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ''ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை?'' என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2768)
ஓர் அடக்கத்தலம் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, ''அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு!'' என்றார்கள். அதற்கு அப்பெண், ''என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல்அப்பெண் கூறினாள். அவர்கள் நபிகளார் எனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். அங்கே நபியவர்களுக்குக் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை ''நான் உங்களை (யாரென) அறியவில்லை'' என நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். ''பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வது தான்)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1283).
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ”
Post a Comment