Thursday, 4 April 2013

சோதனைகள்


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

சோதனைகள் :

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.
(குர்ஆன் - 12:87)


உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று ( இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர் .கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
(குர்ஆன் - 2:214)

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான்.
பொய்யர்களையும் அறிவான்.
(குர்ஆன் - 29:2,3)

ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

(நபியே!) நீர் கூறுவீராக: ”(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?” ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் - ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.
(9:51,52)

ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: திர்மிதீ 2319.

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2323.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
(குர்ஆன் - 2:286)

0 Responses to “ சோதனைகள் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program