Saturday, 27 April 2013

மாநபியின் மகத்தான தீர்ப்புகள்

                                                 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தபோது யூதர் ஒருவர் வந்து, 'அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அந்தத் தோழர்) யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அன்சாரிகளில் ஒருவர்" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்" என்று உத்திரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன், 'இவரை நீர் அடித்தீரா?' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி, 'இவர் கடைவீதியில், 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததை செவியுற்றேன். உடனே நான், 'தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட, இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்" என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில், மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது, பூமி பிளந்து வெளிப்படுத்துபவர்களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது, நான் மூஸாவை அர்ஷின் (இறை சிம்மாசனத்தின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். 'மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்டபோது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதுமென்று, இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு)விட்டதா என்று எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2412.

********************
'ஒருவன் ஒரு முஸ்லிமுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்வானாயின், மறுமையில், தன் மீது கோபம் கொண்ட நிலையில் அல்லாஹ்வை, அவன் சந்திப்பான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கும்போது கேட்டுக் கொண்டிருந்த அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) கூறலானார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில்தான் இதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கும் ஒரு யூதருக்கும் இடையே ஒரு நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்து விடவே நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்), 'உன்னிடம் (உன் வாதத்திற்கான) ஆதாரம் ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை" என்றேன். நபி(ஸல்) அவர்கள் யூதரைப் பார்த்து, '(அப்படியென்றால் நிலம் என்னுடையது தான். அதில் இந்த முஸ்லிமுக்கு எந்த உரிமையும் இல்லை' என்று) சத்தியம் செய்" என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவ்வாறென்றால் அந்த யூதன் (பொய்) சத்தியம் செய்து என் சொத்தை அபகரித்துச் சென்று விடுவானே!" என்று கூறினேன். (அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறினார்கள்.) உடனே, 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்பவிலைக்கு விற்றுவிடுகிறவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' (திருக்குர்ஆன் 03:77) என்னும் திருக்குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2416.
*******************
கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
எனக்கு அப்துல்லாஹ் இப்னு அபீ ஹத்ரத்(ரலி) கொடுக்க வேண்டிய கடன் ஒன்று இருந்தது. நான் அவரை (பாதையில்) சந்தித்தேன். உடனே அவரைப் பிடித்துக் கொண்டேன். (கடனைத் திருப்பிச் செலுத்தும்படி நச்சரிக்கலானேன்). நாங்கள் இருவரும் வாக்குவாதம் செய்யவே எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை, 'கஅபே!" என்றழைத்து, 'பாதியை (வாங்கிக் கொள்)" என்று கூறுவது போல் தம் கையால் சைகை செய்தார்கள்.
எனவே, நான் இப்னு அபீ ஹத்ரத்(ரலி) திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்த கடனில் பாதியை வாங்கிக் கொண்டு மீதியை (மன்னித்து)விட்டுவிட்டேன்.
பாகம் 3, அத்தியாயம் 44, எண் 2424.

0 Responses to “ மாநபியின் மகத்தான தீர்ப்புகள் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program