Friday, 21 June 2013
பெருமை கொள்ளாதீர்கள்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
பெருமை அல்லாஹ்வுக்கே உரியது :
17:111. “அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.
74:3. மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
45:37. வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது .அவன் மிகைத்தவன்;ஞானமிக்கவன்.
பெருமை கொள்ளாதீர்கள் :
4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
16:29. “ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள்” (என்றும் மலக்குகள் கூறுவார்கள்; ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
17:37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.
17:83. நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால் அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு) தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி விடுகிறான்.
31:18. “(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
32:15. நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.
39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?
39:72. “நரகத்தின் வாயில்களுள் நுழைந்து விடுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்” என்று (அவர்களுக்குக்) கூறப்படும்; பெருமை அடித்துக் கொண்டிருந்தோருடைய தங்குமிடம் மிகவும் கெட்டது.
40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
"யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).
நூல்: முஸ்லிம் 131.
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள், 'யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விழுகிறது' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5784.
படைத்தவனையே பெருமை படுத்துவோம். பெருமைக்குரியவனும் புகழுக்குரியவனும் அல்லாஹ் ஒருவனே!
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ பெருமை கொள்ளாதீர்கள் ”
Post a Comment