Thursday, 20 June 2013

உறவுகளைப் பேணுவோம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . 


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 


'ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாம்விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
நூல்: புகாரி - 55.

மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.
சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் எங்கள் குடும்பத்தினரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றி விவரித்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று தங்குங்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். என்னை எவ்வாறு தொழக கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்" என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்ன சில செய்திகள் எனக்கு நினைவிலில்லை.
நூல்: புகாரி - 631.

"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்."
"ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்" என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.
நூல்: புகாரி - 893.

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னிடம் 'நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிய வருகிறதே' என்று கேட்டார்கள். அதற்கு நான் அப்படித்தான் செய்கிறேன் என்று விடையளித்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீர் இவ்வாறு செய்தால் உம்முடைய கண்கள் பலவீனப்படும். உடல் நலியும் - உம்முடைய குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. எனவே நீர் (சில நாள்கள்)விட்டு விடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! என்று கூறினார்கள்.
நூல்: புகாரி - 1153.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன்னுடைய தர்மத்தைத்) தொடங்கு.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி - 5356.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) (நபி(ஸல்) அவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி - 5359.

அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்
நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி - 5363.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் தாய், பிறகு உன் தாய், பிறகு உன் தாய். பிறகு உன் தந்தை. பிறகு உனக்கு மிகவும் நெருக்கமானவர். (அடுத்து) உனக்கு மிகவும் நெருக்கமானவர்" என்று விடையளித்தார்கள்.
நூல்: முஸ்லிம் - 4980.

அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களை, கிராமவாசிகளில் ஒருவர் மக்கா செல்லும் சாலையில் சந்தித்தபோது,அவருக்கு அப்துல்லாஹ் முகமன் (சலாம்) கூறி, அவரைத் தாம் பயணம் செய்துவந்த கழுதையில் ஏற்றிக் கொண்டார்கள். மேலும், அவருக்குத் தமது தலைமீதிருந்த தலைப்பாகையை (கழற்றி)க் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் அவர்களிடம், "அல்லாஹ் உங்களைச் சீராக்கட்டும்! இவர்கள் கிராமவாசிகள். இவர்களுக்குச் சொற்ப அளவு கொடுத்தாலே திருப்தியடைந்து விடுவார்கள்" என்று கூறினோம்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "இவருடைய தந்தை (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் அன்புக்குரியவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" எனக் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் - 4989.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதை, அல்லது வாழ்நாள் நீட்டிக்கப்படுவதை விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் - 4998.

0 Responses to “ உறவுகளைப் பேணுவோம் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program