Saturday, 1 June 2013

ஆட்சியாளர்கள்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் .   
 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இந்தியா பல்வேறு கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் கொண்ட நாடு. இங்கு பல்வேறு இனங்களையும், மொழிகளையும் கொண்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் நம் இந்திய நாட்டை எல்லோரும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்று அழைக்கின்றனர்.
நம் நாடு ஜனநாயகம் என்று சொல்லப்படும் மக்களாட்சி தத்துவத்தை அரசியல் நெறிமுறையாக கொண்ட நாடு. 

ஆனால் அரசியல்வாதிகள் ....

ஒரு பக்கம் ஊழல்கள் என்றால் மறுபக்கம் வறுமை. இதுதான் இன்றைய இந்தியா!

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த நிகழ்வுகள் இன்றைய ஆட்சியா ளர்களுக்கு படிப்பினை என்றால் அது மிகையாகாது. அதில் ஒரு சம்பவம்...

இஸ்லாத்தின் இரண்டாவது கலிஃபாவான உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இஸ்லாம் ஆட்சி செய்த நிலப்பரப்பும் அகண்டு விரிந்தது. இன்றைக்கு இருப்பது போன்று அன்று போக்குவரத்து வசதிகளோ, தகவல் தொடர்பு வசதிகளோ இல்லாத ஒரு காலகட்டம் அது!
ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்கள் இரவுப் பொழுதில் நகர்வலம் வரும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் நகர்வலம் வந்து கொண்டிருந்தபோது பெண்மணி ஒருத்தி அடுப்பில் எதையோ கொதிக்க வைத்துக் கொண்டிருந்தாள். அவளருகில் இரண்டு குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. உமர் (ரலி) அவர்கள் அந்தப் பெண்மணியை நெருங்கி (அவள் நாட்டுப்புறத்துப் பெண்மணி என்பதால் வந்திருப்பது ஆட்சியாளர் உமர்தான் என் பதை அவள் அறியவில்லை) 
“குழந்தைகள் ஏன் அழுகின்றன?'' எனக் கேட்டார்.
அதற்கு அப்பெண், “பசியால் அழுகின்றன என்றாள். “நீங்கள் என்ன கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று ஆட்சியாளர் கேட்டார். 
“அடுப்பில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கின்றது'' என்று பதிலளித்தாள் அப்பெண். “ஏன்'' என ஆட்சியாளர் கேட்க... “அடுப்பில் ஏதோ உணவு வெந்து கொண்டிருக்கின்றது என்ற எண்ணத்தில் குழந்தைகள் தூங்கி விடுவார்கள் என்பதற்காக தண்ணீரைக் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். பின்னர் அல்லாஹ் எங்களுக்கும், ஆட்சியாளர் உமருக்கிடையில் தீர்ப்பு வழங்குவான்...'' என அந்தப் பெண் சொன்னாள்.
“இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மக்களின் கடமைகளை நிறைவு செய்யாவிட்டால் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்பது இஸ்லாத்தின் நியதி. அந்தப் பெண்மணி, “அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான்...'' என்று இதைத் தான் குறிப்பிட்டாள்.
அந்தப் பெண்மணி இப்படி கூறியதும், “உமருக்கு (ஆட்சியாளர்) உங்கள் நிலைமை எப்படித் தெரியும்...?'' என்று கேட்டார் உமர் (ரலி).
“எங்களுடைய நிலைமையைத் தானாகத் தெரிந்திட முடியாத உமர் ஏன் ஆட்சியாளர் என்ற பெரிய பொறுப்பைச் (செயலுக்கு) சுமந்திட வேண்டும்...?'' என்று பட்டென பதிலுரைத் தாள் அப்பெண்.
உடனே உமர் (ரலி) அவர்கள் பொது நிதிக்கருவூலத்தில் (பைத்துல்மால்) தானியங்கள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தார்கள். அங்கிருந்து அந்த குடும்பத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை எடுத்து தனது பணியாளர் அஸ்லம் அவர்களி டம் அவற்றைத் தன் முதுகிலேயே ஏற்றிடச் சொன்னார்கள்.
பணியாளரோ, “நானே எடுத்து வருகிறேன்...'' என்று கூற, அதற்கு உமர் அவர்கள் “நாளைய தீர்ப்பு நாளில் (மறுமையில்) நீ என்னுடைய பளுவைச் (சுமையை) சுமப்பாயா?'' எனக் கேட்டு விட்டு, தானே உணவுப் பொருட்களை சுமந்து சென்று அப்பெண்மணியிடம் ஒப்படைத்தார்கள்.
நாம் இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் அந்தப் பெண்மணி, “எங்களுக்கும் உமருக்குமிடையே இறைவன் தீர்ப்பு வழங்கட்டும்...'' என்று சொன்னது, "எங்களுடைய பட்டினியை (குறைகளை) தானாகத் தெரியாத ஆட்சியாளர் ஏன் பதவியில் இருக்க வேண்டும்?' என்ற பொருளில்தான் இஸ்லாமிய சமுதாய அமைப்பில் குடிமக்களின் குறைகளை கண்டறிந்து களைவதுதான் ஆட்சியாளர்களின் பொறுப்பு.
இதைத்தான் “சுதந்திர இந்தியாவில்" காங்கிரஸ் ஆட்சி அமையுமானால் கலிபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்...'' என்று சொன்னார் மகாத்மா காந்தி.
அப்போது இந்நாட்டை நீதி மிக்க உமர் (ரலி) போன்றவர்கள் தான் ஆள வேண்டும் என்று காந்தி நினைத்திருப்பார். ஆனால் இன்றோ எப்படிப்பட்டவர் ஆள்கிறார்கள் என்பது மக்கள் அறிந்ததுதான்.

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு)ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
(அல் குர்ஆன் - 24:55)

0 Responses to “ ஆட்சியாளர்கள் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program