Thursday, 6 June 2013

நற்குணம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் .  

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 


அன்றைய அரபுலகத்தில் அறியாமை இருள் நிறைந்திருந்த காலகட்டத்தில் இறுதி இறைத்தூதராக நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தார்கள்.
அவர்களின் அழகிய போதனைகளும் அவர்களின் நடவடிக்கைகளும் அறியாமை இருளை நீக்கி அழகிய வாழ்க்கை முறையை மக்களுக்குத் தந்தது. இன்றும் அந்த அழகிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி நடக்கும் அரிய வாய்ப்பை நபிகளார் மூலம் அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான்.
இறுதித் தூதுவராக வருகை தந்த நபிகளார் அவர்கள் இறைத்தூதுப் பணிக்கு வருவதற்கு முன்னரும் பின்னரும் அழகிய நற்குணங்கள் நிறைந்தவர்களாக இருந்தார்கள்.

68:4. மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
5:93. ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.

7:179. நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.

7:200. ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

10:16. “(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

“அவர்கள் (அறியாமைக் காலத்தில்) முரண் பிடித்துப் பேசியதும் இல்லை, சண்டையிட்டதும் இல்லை” என்று அவர்களின் அறியாமைக் கால நண்பர் ஸாயிப் பின் அபீ ஸாயிப் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: அஹ்மத் 14956, அபூதாவூத் 4196, இப்னுமாஜா 2278.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டைச் சமையுங்கள்' என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனை வரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராம வாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?'என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்' என்று விடையளித்தார்கள்.
நூற்கள் : அபூதாவூத் 3773, பைஹகீ 14430.

ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்' என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.
நூல் : இப்னு மாஜா 3303.

வீதியில் செல்லும் போது சிறுவர்களைக் கண்டால் அவர்கள் முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு சலாம் கூறுவார்கள்.
நூல் : புகாரி 6247.

நீண்ட நேரம் தொழுகை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தொழுகை நடத்த நிற்கிறேன். அப்போது பின்னால் நின்று தொழும் பெண்ணுடைய குழந்தையின் அழுகுரல் எனக்குக் கேட்கிறது. அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காகத் தொழுகையைச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : புகாரி 707, 708, 709, 710.

அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் கூறியதாவது... இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் நுழைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. 'அல்லாஹ்வின் தூதரே நீங்களுமா?' என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது இரக்க உணர்வாகும்' என்று கூறி விட்டு மீண்டும் அழுதார்கள். 'கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் வேதனைப்படுகிறது; எங்கள் இறைவனுக்குப் பிடிக்காத எதையும் நாம் பேச மாட்டோம்; இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம்' என்றும் கூறினார்கள்.
நூல் : புகாரி 1303.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'என் தந்தை எங்கே இருக்கிறார்' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில்' என்றார்கள். அவர் கவலையுடன் திரும்பிச் சென்றார். அவரை மீண்டும் அழைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்கள்' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 302.

நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

0 Responses to “ நற்குணம் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program