Wednesday, 26 June 2013
குடும்பத்தினருக்காக செலவு செய்தல்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
2:215. அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; “எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்” என்று; நீர் கூறும்: “(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.”
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும்.
என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் (அப்துல்லாஹ் இப்னு யஸீத், அல்லது ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)) கூறுகிறார்:
நான் அபூ மஸ்வூத்(ரலி) அவர்களிடம், 'இதை நீங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறீர்களா? (அல்லது நீங்களாக இதைக் கூறுகிறீர்களா?') என்று கேட்டதற்கு, அவர்கள் 'நபி(ஸல்) அவர்களிடமிருந்தே (இதை அறிவிக்கிறேன்)' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 5351.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், 'ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்' என்று கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 5352.
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது,
நான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரித்து வந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரண சாசனம் செய்து விடட்டுமா? என்று கேட்டேன். அவர்கள், வேண்டாம் என்று பதிலளித்தார்கள். நான் பாதியை (மரணசாசனம் செய்துவிடட்டுமா)? என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். நான், (அப்படியென்றால்) மூன்றிலொரு பங்கை (நான் மரணசாசனம் செய்யட்டுமா)? என்று கேட்டேன். அதற்கவர்கள் மூன்றிலொரு பங்கா! மூன்றிலொரு பங்குகூட அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவு கொண்டவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் (அவர்களுக்காக) எதைச் செலவு செய்தாலும் அது நீங்கள் செய்த தர்மமே. எந்த அளவிற்கென்றால் நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் உணவும் கூட (தர்மமாகவே உங்களுக்கு எழுதப்படும்) அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கக்கூடும். அப்போது மக்கள் சிலர் உங்களால் பயன் அடைந்திடவும்., வேறு சிலர் உங்களால் இழப்புக்குள்ளாகவும் கூடும் என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 5354.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன்னுடைய தர்மத்தைத்) தொடங்கு.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 5356.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்,
(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) (நபி(ஸல்) அவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 5359.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண், தன் கணவனின் சம்பாத்தியத்திலிருந்து அவனுடைய உத்தரவின்றி (அறவழியில்) செலவிட்டால், அதன் பிரதிபலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நூல்: புகாரி 5360.
அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்,
நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி 5363.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்,
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'நான் அழிந்துவிட்டேன்' என்ற கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'ஏன் (என்ன நடந்தது)?' என்று கேட்டார்கள். அவர், 'நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடிமையை விடுதலை செய்து விடுவீராக' என்று கூறினார்கள். அதற்கு அவர் 'என்னிடம் அடிமை இல்லையே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பீராக' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'அது என்னால் இயலாது' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக' என்று கூறினார்கள். அம்மனிதர், 'என்னிடம் வசதி இல்லையே!' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் உள்ள ஒரு கூடை (அரக்) கொண்டு வரப்பட்டது. உடனே அவர்கள், 'கேள்வி கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். அவர், 'இதோ! நானே அது' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'இதை தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு அவர் 'எங்களை விட அதிகத் தேவையுள்ள ஒருவருக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்? இறைத்தூதர் அவர்களே! உங்களை சத்தியத்துடன் அனுப்பிய (இறை)வன் மீது ஆணையாக! மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுள்ள குடும்பத்தார் எவரும் இல்லை' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, 'அப்படியென்றால் நீங்கள்தாம் (அதற்கு உரியவர்கள்)' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5368.
யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ குடும்பத்தினருக்காக செலவு செய்தல் ”
Post a Comment