Thursday, 20 June 2013
மண்ணறை வேதனை
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் .

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கில்லையாயின் , மண்ணறையின் வேதனையை உங்களுக்குக் கேட்கச் செய்யுமாறு நான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருப்பேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 5503.
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் :
ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும் போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும் போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள்.
நூல்: புகாரி 1373.
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20:124) என்ற வசனத்தில் (சொல்லப்பட்ட தண்டணை) மண்ணறை வேதனையைப் பற்றியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
நூல்: இப்னு ஹிப்பான் 3174.
மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர். ஒருவர் “முன்கர் மற்றொருவர் “நகீர். இந்த மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர். “அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார். “உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் என்று அம்மலக்குகள் பதிலளிப்பர். பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி “உறங்குவீராக! என்று கூறப்படும். “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் “நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள். இறந்த மனிதன் முனாபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் “இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான்.
அதற்கு அவ்வானவர்கள் “நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர். அதன் பின் பூமியை நோக்கி “இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எழும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : திர்மிதீ 991.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.
‘அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத், வமின் ஷர்ரி ஃபித்ன( த்)தில் மஸீஹித் தஜ்ஜால்.
பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின்தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 924.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார் :
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி (ஸல்) அவர்கள் சென்ற போது, ‘இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்’ எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’ என்று கேட்டதும், ‘இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1361.
23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.
23:100. “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
|
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Responses to “ மண்ணறை வேதனை ”
Post a Comment