Friday, 28 June 2013

இறைச்செய்தி (வஹீ)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 

 இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 

4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.

6:106. (நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.

53:1. விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!

53:2. உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.

53:3. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.

53:4. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.

53:5. மிக்க வல்லமையுடைவர் (ஜிப்ரீல்) அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

53:6. (அவர்) மிக்க உறுதியானவர்; பின்னர் அவர் (தம் இயற்கை உருவில்) நம் தூதர் முன் தோன்றினார்.
________________________________________________________________________

1. 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

2. ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார். மேலும்,
"கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி(ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்" என ஆயிஷா(ரலி) கூறினார்.

4. 'நான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என் பார்வையை உயர்த்திப் பார்த்தேன். அப்போது ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டு அச்சமுற்றேன். (வீட்டிற்குத்) திரும்பி வந்து (கதீஜாவிடம்) என்னைப் போர்த்துங்கள் என்றேன். அப்போது, 'போர்வை போர்த்தியவரே எழும்! (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யும்!' (திருக்குர்ஆன் 74:01) என்பது தொடங்கி 'அசுத்தங்களைவிட்டு ஒதுங்கி விடும்!' என்பது வரை ஐந்து வசனங்களை இறைவன் அருளினான்" என் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என வஹீ (இறைச்செய்தி) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றிக் கூறும்போது ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். அதன் பின்னர் வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அடிக்கடி தொடர்ந்து வரலாயிற்று என்றும் அவர் கூறினார்.

6. 'நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட (வேகமாக) நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி.
பாகம் 1, அத்தியாயம் 1, எண் 1,2,4,6.

0 Responses to “ இறைச்செய்தி (வஹீ) ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program