Saturday, 29 June 2013

ஈமான் எனும் இறைநம்பிக்கை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.  


இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!  

(லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்)நல்ல வாக்கியத்திற்கு அல்லாஹ் கூறும் உதாரணத்தை (நபியே!)நீர் பார்க்கவில்லையா? அது நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப்பதிந்தும் அதன் கிளைகள் வானளாவியும் இருக்கின்றன. அது தன் இரட்சகனின் அனுமதி கொண்டு ஒவ்வொரு நேரத்திலும் கனிகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. (அல்குர்ஆன் 14:24,25)

8:2. உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

16:102. (நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும்,(இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.

_________________________________________________________________________________

8.'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

11. 'இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?' என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு 'எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

13. 'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

14. 'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

39. 'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

50. நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்" என்று கூறினார்கள்.
அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்' அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானார்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்" என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது." (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். 'அவரை அழைத்து வாருங்கள்" என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, 'இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

54. 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் கட்டளைக்கேற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணந்து கொள்வார். எனவே இவர்களின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர்(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி.
பாகம் 1, அத்தியாயம் 2, எண் 8,11,13,14,26,39,50,54.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

0 Responses to “ ஈமான் எனும் இறைநம்பிக்கை ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program