Friday, 31 May 2013

வறுமை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் .   

இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! 


2:177. புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).

2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

6:42. (நபியே!) உமக்கு முன்னர் இருந்த சமூகத்தாருக்கும் நாம் (நம்) தூதர்களை அனுப்பினோம்; அச்சமூகத்தாரை நோயைக் கொண்டும் வறுமையைக் கொண்டும் பிடித்தோம் அவர்கள் பணிந்து வரும் பொருட்டு.

6:151. “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

7:94. நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.

9:28. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது; (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.

22:36. இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இறப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் - இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

30:33. மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.

அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தம் வறுமையைப் பற்றி முறையிட்டார். மற்றொருவர் வழிப்பறி பற்றி முறையிட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வழிப்பறி என்பது அரிதாக, வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை காவலரின்றிச் செல்லும்போது மட்டுமே நடக்கும். ஆனால் வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக் கொண்டு அலைவான். அதை வாங்குவதற்கு எவனும் இருக்கமாட்டான். அந்நிலை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது. பிறகு உங்களிலொருவன் அல்லாஹ்வின் முன்னிலையில் நிற்பான். அவனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக்காது; மொழி பெயர்ப்பாளனும் இருக்கமாட்டான். அப்போது (அல்லாஹ்,) 'நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?' எனக் கேட்க அவன் 'ஆம்' என்பான். பிறகு உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்ப வில்லையா? எனக் கேட்டதும் அவன் 'ஆம்" என்று கூறிவிட்டுத் தன்னுடைய வலப்பக்கம் பார்ப்பான். அங்கும் நரகமே காட்சியளிக்கும். எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது அதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்" எனக் கூறினார்கள்.
ஸஹீஹுல் புகாரி - 1413.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார். 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹுல் புகாரி - 1419.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தர்மப் பொருள்களைப்) பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்கு நீங்கள் கொடுங்கள். அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்)" என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்லுங்கள்!" என்றார்கள். நான் முன்பு கூறியதைப் போன்றே மூன்று முறை கூறினேன். நபி (ஸல்) அவர்களும் முன்பு கூறியதைப் போன்றே "அவரை முஸ்லிம் (என்று சொல்லுங்கள்)" என்று மூன்று முறை என்னிடம் கூறினார்கள். பிறகு, "நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், அவரைவிட மற்றொருவர் என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்குக்) காரணம், (நான் ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையினால் அவர் குற்றம் ஏதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகத்தில் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான்" என்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் - 236.

0 Responses to “ வறுமை ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program