Thursday, 23 May 2013

ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை)

                                                                        பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் . 
இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!


சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்று தான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்; அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்; அன்று தான் யுக முடிவு நிகழும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 1548.
உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸீர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்" என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ்,
நூல்: அபூதாவூத் 883.

நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம். மறுமையில் (அந்தஸ்தால்) முந்தியவர்களாவோம். எனினும், (யூத, கிறிஸ்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள். மேலும் இந்த நாள்தான் அவர்களுக்கும் (வாரவழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இ(ந்த நாளைத் தம் வாரவழிபாட்டு நாளாக ஏற்றுக் கொள்வ)தில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர்களே ஆவர். (எவ்வாறெனில், வெள்ளிக் கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை) யூதர்களும் மறு நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறிஸ்தவர்களும் (வார வழிபாடு நடத்தும் தினங்களாகும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 876.

ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) வந்து விட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வாசலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவர்களையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவர்களையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் உரைமேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்து விட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்து விட்டு (அவரது உபதேச) உரையைச் செவிமடுத்த வண்ணம் (உள்ளே) வருவார்கள்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 3211.

பெருந்துடக்கிற்காக (கடமை) குளிப்பது போன்று ஜும்ஆவுடைய நாளில் குளித்து விட்டு பள்ளிக்கு (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார். இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு,
நூல்: புகாரி 881.

ஜும்ஆ நாளில் ஒருவர் குளிக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜும்ஆ வுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: சல்மான் அல்ஃபார்சீ (ரலி),
நூல்: புகாரி 883.

ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி),
நூல்: புகாரி 879.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளில் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இன்னாரே! தொழுது விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை’ என்றார். ‘எழுந்து தொழுவீராக!’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
நூல்: புகாரி 930.

ஜும்ஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், “நீ மௌனமாக இரு! என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 934.

ஜும்ஆ தினத்தின் பன்னிரெண்டு மணி நேர பகல் நேரத்தில், ஒரு முஸ்லிம் (துஆ ஏற்கப்படும் அந்த அரிய) நேரத்தை அடைந்து (நன்மையான) எதை கேட்டாலும் அல்லாஹ் அவனுக்கு அதை வழங்காமல் இருப்பதில்லை. அஸருக்குப் பின் இறுதி நேரத்தில் அதை தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி),
நூல்: அபூதாவூத் 886.

வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 6400.

ஒரு ஜும்ஆ விலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம் 394.

அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஜஃது (ரலி),
நூல்: நஸாயீ 1378.
 

0 Responses to “ ஜும்ஆ நாள் (வெள்ளிக் கிழமை) ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program