Wednesday, 1 May 2013

அநியாயக்காரர்கள்

ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

நான் இப்னு உமர் (ரலி) அவர் களுடன், அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் குறுக்கிட்டு, (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹு தஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து, அவன் மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி, நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்பான். அதற்கு அவன், ஆம், என் இறைவா! என்று கூறுவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான். அந்த முஃமின், நாம் இத்தோடு ஒழிந்தோம் என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன், இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன் என்று கூறுவான். அப்போது அவனது நற் செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும்.
நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், இவர்கள் தாம், தம் இறைவன் மீது பொய்யைப் புனைந் துரைத்தவர்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகும் என்று கூறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.
புஹாரி - 2441.

அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; “இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.(அல் குர்ஆன் - 11:18)

0 Responses to “ அநியாயக்காரர்கள் ”

Post a Comment

Trafficmonsoon

Share Up To 110 % - 10% Affiliate Program